கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த கெடிலம் பகுதியில் பள்ளி செல்லும் வழி மற்றும் குடியிருப்பு பகுதியின் நடுவே செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபானக் கடையை மூட வலியுறுத்தி 200-க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட பொதுமக்கள் நடத்திய போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தியது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தபோது பெண்களை தரதரவென இழுத்துச் சென்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கெடிலம் மாரனோடை சாலையில் 11688 எண் கொண்ட டாஸ்மாக் மதுபானக் கடை பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்தக் கடை பள்ளி மாணவர்கள் தினமும் பயன்படுத்தும் பாதையிலும், குடியிருப்பு பகுதியின் மத்தியிலும் அமைந்துள்ளதால், மதுபோதையில் வரும் நபர்களால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அச்சத்துடன் வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
மேலும், மதுபானக் கடையைச் சுற்றியுள்ள பகுதிகளில் திருட்டு, கொள்ளை, தகராறு உள்ளிட்ட சமூக விரோதச் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் பொதுமக்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து, மதுக்கடையை உடனடியாக மூடக்கோரி 200-க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட ஏராளமான பொதுமக்கள் டாஸ்மாக் கடை முன்பு திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் கைகளில் பதாகைகளை ஏந்தி, “குடியிருப்பு பகுதியில் உள்ள மதுக்கடையை அகற்ற வேண்டும்”, “பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்” என கோஷங்களை எழுப்பினர்.
போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் போராட்டக்காரர்களை அங்கிருந்து அகற்ற முயன்றனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை போலீசார் தரதரவென இழுத்துச் சென்று கைது செய்து காவல் துறை வாகனங்களில் ஏற்றியதாக கூறப்படுகிறது.
பெண்களை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்தபோது சிலர் கீழே விழுந்து காயமடைந்ததாகவும், போலீசாரின் நடவடிக்கைக்கு எதிராக போராட்டக்காரர்கள் கடும் கண்டனம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
மதுக்கடையை மூடக்கோரி நடைபெற்ற இந்தப் போராட்டம் மற்றும் பெண்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் கெடிலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
D.செல்வம்
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர்
தமிழக குரல்.



No comments:
Post a Comment